Saturday 16 July 2011

கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் ''சிரிப்பு''

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது
ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

   * * * * *

No comments:

Post a Comment