ஒரு பெண்ணின் கதை
------------------------------------
கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால் காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன்.
எனை சுற்றி உள்ள உலகத்தை
சுதந்திரமாக பார்க்கமுடியவில்லை
என் எண்ணத்தை
வெளிப்படையாக சொல்ல முடியவில்லை
விழிகளுக்கு மட்டும் திரைபோடவில்லை
வாழ்க்கைக்கே திரைபோட்டு வைத்தனர்
பெண் என்று சொல்லி.
அதிகம் சிரிக்கக்கூடாது
அதிகம் பேசக்கூடாது
அதிகம் உறங்கக்கூடாது
அன்னார்ந்து படுக்கக்கூடாது.
கண்மை வைக்கக்கூடாது
கண்ணாடி முன்னே நிற்கக்கூடாது
கால்கொலுசு அதிகம் சிணுங்கக்கூடாது
கைவளையல் அதிகம் குலுங்கக்கூடாது
பூமியை பார்த்தே நடக்கவேண்டும்
அடுத்தவர் வீட்டுக்கு போகும் பெண்
அடக்கமாய் இரு.
அடுத்தவர் வீட்டுக்கு போனபிறகு
"எங்கிருந்தோ வந்தவள்"
"நேற்று வந்தவள்"
பெண் என்று சொல்லியே
அடக்கப்பட்டேன்
பெண் என்று சொல்லியே
ஒடுக்கப்பட்டேன்.
மோகப்பொருளாகவே
பார்க்கப்பட்டு
மோகப்பொருளாகவே
வளர்க்கப்பட்டு
மோகப்பொருளாகவே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
வாழ்வை நான் வாழவில்லை
என் வாழ்வையும் சேர்த்து
யார் யாரோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
ஏதேதோ உறவைச்சொல்லி.
-----------------------------இனியவள் தமிழ்மொழி, பஹ்ரைன்
Tamil Koodal
No comments:
Post a Comment