Tuesday, 2 August 2011

என்னத்த எழுத??

பல நேரங்களில் எதை எழுதுவது என்ற சிந்தனையே எதையும் எழுத முடியாத மனநிலைக்குத் தள்ளிவிடுகிறது. விடியற்காலையில் என்றாவது தூக்கம் கெட்டால், புதிதாய் எதையாவது எழுத மனசுக்குள்ளே மணியடிக்கும். சரி, அலுவலகம் வந்தபின் அதை எழுதிடலாம் என்று நினைத்தால் ஹ்ம்ம்ம் நடக்காது. அன்றைக்கென சோதனையாக வேலைச்சுமை அதிகமாக இருக்கும், அல்லது வேறு அரட்டைகளில் பொழுது கழிந்துவிடும். இப்படி என் பதிவு தூங்கிக் கொண்டிருந்தது தமிழ்மண நிர்வாகிகளுக்குப் பொறுக்கவில்லை போல. ஒரு நாள் “நட்சத்திரப் பதிவர்” ஆக விருப்பமா என்று மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். “நான் எழுதுவதே குறைஞ்சு போச்சு, உங்க புண்ணியத்திலாவது எழுதுறேன்” என்று சொல்லி சம்மதம் தெரிவித்தேன். சொன்ன நாளும் வந்தாயிற்று. என்னத்த எழுத??? இப்போதைய மனநிலையில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே கொட்டத் தீர்மானித்துவிட்டேன். இனி உங்கள் பாடு, தமிழ்மணத்தின் பாடு.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக மிகுந்த மன அழுத்தம். காரணம், ஒரு சிறு தவறு/அலட்சியம். என் பெற்றோரை விசிட் விசாவில் சவுதிக்கு அழைத்து வந்திருந்தேன். அவர்களது விசாவைப் புதுப்பிப்பதில் சிறிய காலத் தாமதம் ஏற்பட்டது. அப்பொழுது தெரியவில்லை, அதன் விளைவுகள் பெரிதாக இருக்குமென்று. பெரிது!! ஆமாம் பெரிது தான். முன்பெல்லாம் விசா புதுப்பிக்கப்படவில்லை என்றால் விசிட்டில் வந்தவர்களுக்கு ஐந்து வருடம் சவுதிக்குள் திரும்ப நுழையத் தடை, ஒரு பாஸ்போர்ட்டுக்கு 10,000 ரியால் தண்டனைக்கட்டணம், அது போக விசாவைக் கொடுத்தவருக்கும் எக்ஸிட். இத்தனையும் வரிசையாய் தெரியவர, மிகுந்த மன உளைச்சல். பின்னர், இப்போதைய சட்டத் திருத்தப்படி விசா கொடுத்தவருக்கு எக்ஸிட் இல்லை என்று தெரிந்தது. நுழைவுத்தடை கூடப் பெரியப் பிரச்சனையாக கண் முன் தெரியவில்லை. 10,000 ரியால்கள் ஒரு பாஸ்போர்ட்டுக்கு என்றது மலைப்பாக இருந்தது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுக்கு 20,000 ரியால்கள். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் இந்தியப் பணம். கடவுளே, சிறு அலட்சியத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று புலம்பத் தொடங்கியது மனம். எங்கள் நிறுவனத்தின் மனிதவளத் துறை என்னுடன் ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் அலைந்தது. இறுதியாக இன்று காலையில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்தது. பெற்றோர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நாடு திரும்பலாம். தண்டனைக்கட்டணமும் இல்லை. இப்படி மிகுந்த மன உளைச்சல் இருந்த இந்த நாள்களில் என்னைப் பெரிய அளவில் அது பாதிக்காததற்குக் காரணம் கூகிள் பஸ்.

கூகிள் பஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, அதுவும் ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் போல கூகிளால் வழங்கப்பட்ட ஒரு சமூகத் தளம். நான் பத்து வருடங்களுக்கு முன் மின்னஞ்சல் குழுமங்களில் பார்த்துப் பழகிய முகங்கள் தொடங்கி, தொடக்க காலப் பதிவர்கள் முதல் இன்றைய புதியவர்கள் வரையில் சங்கமித்து ரவுண்டு கட்டும் பெருங்கடல் அது. ட்விட்டர் போன்று 140 சொற்களென கட்டுப்பாடு எதுவுமில்லாமல் ரகளை கட்டி உரையாடலாம். சண்டை போடலாம், சமாதானம் ஆகலாம். சில நேரங்களில் உருப்படியாய் எதாவது படிக்கவும் செய்யலாம். இந்த கூகிள் பஸ்ஸில் நம்ம குசும்பனும் இருக்கிறார். குசும்பன் ஸ்பெஷலே ரகளையான நகைச்சுவை பதிவுகள். அந்த நகைச்சுவை அளவுக்கு மீறின டைமிங் சென்ஸுடன் பஸ்ஸிலும் தொடர்கிறது. மனுஷன் ரவுண்டு கட்டி அடிக்கிறார். மனோதத்துவ மருத்துவர்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் மன அழுத்தம் குறைவதற்காக ஆலோசனைக்கு வந்தால் தாராளமாக குசும்பனை கூகிள் பஸ்ஸில் தொடரச் சொல்லலாம். விழுந்து விழுந்து சிரித்து ஒரே வாரத்தில் அத்தனை அழுத்தமும் குறையுமென கேரண்டியாகச் சொல்வேன். அலுவலகத்தில் அவரது பஸ், பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் கவனமாக வாயை மூடிக்கொண்டு படிக்கவும். சத்தம் போட்டுச் சிரித்து மேலாளரிடம் மாட்டிக்கொள்ள வேண்டி வரலாம். கூகிள் பஸ் சமூகத் தளங்களுக்கு ஒரு வரம். அந்த கூகிள் பஸ்ஸுக்குக் குசும்பன் ஒரு வரம்.

சமூக வலைத்தளங்களில் பல நண்பர்கள் புகைப்படங்கள், சுய குறிப்புகளைப் பகிர்வதைப் பார்க்கிறேன். பகிர்வது தவறில்லை. ஆனால், அதில் சில சுயக் கட்டுப்பாடுகள் இருப்பவது அவசியம். முக்கியமாக, கூட்டுக்குடும்பமாக இல்லாமல் தனியாக இருப்பவர்கள் வெளியூர் செல்லும் விபரங்களைப் பகிராமல் இருப்பது நல்லது. ஏதோ ஒரு நாட்டில் ஒரு பெண் இப்படிப் பகிர, அதற்கு அவளது நண்பன் பின்னூட்டமிட, அந்தப் பின்னூட்டத்தின் வழியாக இந்தப் பெண்ணின் ஃபேஸ்புக்கிற்கு வந்த ஒருவன் இவள் பகிர்ந்த செய்தி பார்த்து நந்தா படத்து லொடக்குப் பாண்டியாக மாறி வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களையும் லாரியில் அள்ளிக்கொண்டு போய்விட்டானாம். அதே போல, குடும்பத்தினர், குறிப்பாகப் பெண்களின் படங்களைப் பகிராமல் இருத்தலும் நலம். இணையத்தில் சில கிறுக்குக் களவாணிகள் இப்படியான படங்களுக்காகவே சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் பெண்களின் படங்களைத் திருடி அதைக் காமத்தளங்களிலும் சில ஃபோரங்களிலும் பகிர்கின்றனர். அப்படிப் பகிரப்பட்டப் படங்களை வைத்துக்கொண்டு பலர் முகமூடி அணிந்து வக்கிரமாகப் பேசிக்கொள்கின்றனர். நம் வீட்டுப் பெண்கள், நட்புகளைப் பற்றி யாரோ முகம் தெரியாத நபர்கள் வக்கிரமாகப் பேசிக்கொள்ள நாமே இடம்கொடுக்க வேண்டுமா என படங்களைப் பகிரும் முன் யோசித்துக்கொள்ளுங்கள்.

படங்களைப் பற்றிப் பேசும்போது செல்ஃபோனில் படங்கள் எடுப்பது பற்றி ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. செல்ஃபோனில் குடும்பத்தினரை, நண்பர்களைப் படம் எடுப்பவர்கள், ஃபோன் எதாவது பழுதடைந்தால் ஃபோனில் இருக்கும் மெமரி சிப்பைக் கழட்டி உங்களிடம் வைத்துக்கொண்டு ஃபோனை சரிசெய்யக் கொடுங்கள். இல்லையெனில் உங்கள் ஃபோனின் மெமரியில் இருக்கும் படங்கள் திருடப்பட்டு இணையதளங்களில் பகிரப்படும் அபாயம் உண்டு.

ரொம்பவே பயமுறுத்திட்டேன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு நிறுத்திக்கிறேன். நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து பதிவு எழுத வேண்டும். இன்ஷா அல்லாஹ், எழுதுவேன்.

No comments:

Post a Comment