Thursday 11 August 2011

கண்முன் நடமாடும் மனசும் அலைகளோடு துள்ளிக்குதிக்கும் கடலும்



கடல் எழுதும் கதை --------------------------

மனம் போல்
அழகான -
நீளமான கடல்.

கரை ஒதுங்கும்
அலையின் சில்லென்ற ஈரத்தில்
கால்வைத்து -
இதயம் நனைத்துப் பூக்கும்
நீலப் பூக்களுக்கிடையே..

கிரீச்
கிரீர்ச்சென்று கத்தாத,
பட்டாம்பூச்சிகளாய்
இறக்கை அடித்துப் பறந்திடாத,
மாறிமாறி வரும் அலைகளை
விண்ணைத் தொடும் சந்தோசத்தில்
தொட்டு தொட்டு - பூரித்த
கைகால் முளைத்த தாமரைகளுக்கிடையே..

ஒரு கவிதை வேண்டி
கரை தாண்டி
மணல்மேட்டில் பதிந்த
கால்தடங்களை மணல்களில் களைந்துவிட்டு
அங்குமிங்குமாய் பார்க்கிறேன்
எனைவிடுத்து அத்தனையும்
கவிதைகளாய் பூத்துக் கிடந்தன.

பின் -
கண்முன் நடமாடும் மனசும்
அலைகளோடு துள்ளிக்குதிக்கும் கடலும்
விரிந்திருக்க -
எதை எழுதிக் கவிதையென்பேன்???

எத்தனையோ பேரின் வீட்டில்
அழுதிடாத அழையும்,
மனம்விட்டு வெளிவராத சிரிப்பும்,
பொங்கியெழுந்திடாத -
கோபத்தையும் சுமந்து தான்
கடல் -
இப்படிக் கொந்தளிக்கிறதோ..

மணலில் புகுந்து மிஞ்சிய
சிகரெட் துண்டுகளுக்குள்
புகுந்துள்ள எத்தனையோபேரின் கதைகளை
கடல் - தன் அலையும் தண்ணீரில்
எழுதி எழுதி கரைந்து போனதால் தான்
நீல நிறம் கொண்டு விட்டதோ..

காதலின் -
வெற்றியில் ஒதுங்கிக் கொண்டாலும்
தோல்வியில் பரிசளித்து
மரணத்தில் முடைந்துக் கொண்ட
எத்தனை காதலர்களின் பெருமூச்சோ
இந்த அலைகள்..

கடலை விற்பவனிலிருந்து
காதலர்களிடம் குறி சொல்பவளிலிருந்து
பூ விற்பவள் வரை - தன்
இல்லாத நாட்குறிப்பில் இருக்கும் விலாசம்
இந்த கடல்தானே..

கரைதொட்டு கடல்புகும்
அலைபோலவே
ஏதோ ஒன்றை தின்று உறங்கி எழுந்ததில்
எதையோ தொட்டுவிட்டதாகவே
ஆசையென்னும் ஆழத்தில் மூழ்கி மூழ்கி
கூரைவீட்டை தாண்டாத மீனவர்களுக்கு
எமனும் சிவனும்
இந்த ஒற்றை கடல் தானோ..

எல்லாம் தாண்டி
தனியே அமர்ந்து -
கடலையே வெறிக்கும்
எத்தனையோ பேருக்கு
இந்த கடலும் காலமும்
என்ன பதில் வைத்திருக்கிறதோ, தெரியவில்லை.

சற்று நேர அமைதியில்
சூரியன் சற்று சாய்ந்து
இருட்டிக் கொள்கையில் -
இவை எவையையுமே பதிவு செய்யாது
காகிதத்தை கசக்கி கடலில் வீசிவிட்டு
கேள்விகளையும் -
ஏதோ ஒரு கனத்தையும் மனதில் சுமந்தவனாய்
கரையையும் கடலையும் தாண்டி
நகர விளக்கின் வெளிச்சத்திற்குள்
புகுந்துக் கொள்கிறேன்.

கடல் -
என்னையும்
தன் அலைகளிடம் யாரேன்றுக் கேட்டு
தண்ணீரில் எழுதிக் கொள்ளும் போல்!

 
 
~வித்யாசாகர்~
 நன்றி
 

No comments:

Post a Comment