Friday, 29 April 2011

மாணவர்கள்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்: மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் பேச்சு







தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில், மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை கல்விக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார் மதுர
மதுரை, ஏப்.23: மாணவர்கள்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் செயல்பட்டால் மாணவர்கள் எதையும் சாதிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் தெரிவித்தார்.  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி சார்பில் இரு நாள் நடைபெறும் கல்விக் கண்காட்சியை மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி வைத்து மாணவர்களிடையே அவர் பேசியது: பிளஸ் 2 முடித்த பிறகு மாணவர்களின் எதிர்காலத்தை அடித்தளமாக்குவதற்கு எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கு வழிகாட்டும் வகையில் தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுக்குரியது.  இளம் மாணவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சிக்காக தில்லி சென்றிருந்தபோது தமிழ்நாடு இல்லத்தில் 4 நாள்கள் தங்கியிருந்தோம். நேர்முகத் தேர்வுக்கு முன்னதாக, அன்றைய தினம் நிகழ்ந்த அன்றாட நடப்புகளையும், செய்திகளையும் படித்தறிய வேண்டியிருந்தது. அப்போது, நான் தேடிய இதழ் தினமணிதான். தினமணி நல்ல செய்திகளையும், தரமான- உண்மையான செய்திகளையும் சொல்லும் நாளேடு.  இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் என்னைப் போன்று ஐ.ஏ.எஸ். ஆக வரவேண்டும் என்று என்னிடம் பேசும்போது விருப்பம் தெரிவித்தனர். நிச்சயமாக நீங்கள் ஐ.ஏ.எஸ். ஆக வர முடியும். மருத்துவம், பொறியியல் என்று எந்தப் பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும் 21 வயது பூர்த்தி அடைந்திருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்கலாம். அதுமட்டுமின்றி பி.ஏ. தமிழ் இலக்கியம், வரலாறு என வேறு கலைப் பட்டப் படிப்புகளை முடித்திருந்தாலும் இந்தத் தேர்வை எழுதலாம். என்றார் ஆட்சியர்.  மதுரை டால்பின் மெட்ரிக் பள்ளி மாணவியருடன் ஆட்சியர் கலந்துரையாடினார். ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதுவது தொடர்பான மாணவியரின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.  மதுரை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை பதிப்பு மேலாளர் ஆர்.சுந்தரேசன் அரங்குதோறும் அழைத்துச் சென்று கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.  இந்நிகழ்ச்சியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் திருச்சி பதிப்பு மேலாளர் வி.கணேசன், மதுரை மாவட்ட மக்கள்- செய்தி தொடர் அலுவலர் இரா.அண்ணா, மதுரை டால்பின் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஏ.பத்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இக்கண்காட்சியில் முன்னணியில் உள்ள 35-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.