நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும் பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷி.
புதுதில்லி, ஏப். 28: 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக விசாரித்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) வரைவு அறிக்கையை அக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த 11 எம்பிக்கள் வியாழக்கிழமை நிராகரித்து "தீர்மானம்' நிறைவேற்றினர்.2ஜி அலைகற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழு கடந்த ஒரு வருடமாக தனது விசாரணையை நடத்தி வந்தது. இப்போதுள்ள குழுவின் பதவிக் காலம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் விசாரணையின் விவரங்களை அறிக்கையாக தயார் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் குழுவின் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி மேற்கொண்டு வந்தார்.ஜோஷி தலைமையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்தும், நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் குறித்தும், முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கை தொடர்பாக முடிவெடுப்பதற்காக பிஏசி உறுப்பினர்களின் கூட்டம் நாடாளுமன்றத்தின் 63 ஆம் எண் அறையில் வியாழக்கிழமை காலையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்ட கடிதம் முரளி மனோகர் ஜோஷியிடம் அளிக்கப்பட்டது. அதில் குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என அந்த கட்சிகளின் எம்பிக்கள் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி ஜோஷி கேட்டுக்கொண்டார். அதன்படி அனைத்து உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். பிற்பகல் 12.45 மணிக்கு மதிய உணவுக்காக கூட்டத்தை ஒத்திவைத்து மீண்டும் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று ஜோஷி அறிவித்தார். மாலை நான்கு மணிக்கு கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்து கடும் கூச்சல் கேட்டது. இதையடுத்து அறையிலிருந்து முரளி மனோகர் ஜோஷி வெளியே வந்தார்.அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தைத் தொடங்கியவுடன் அறிக்கை மீதும் என் மீதும் உறுப்பினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளதால் அது குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்தேன். ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்னைப் பேச அனுமதிக்காமல் இந்த அறிக்கை இந்த கமிட்டியால் தயாரிக்கப்படாமல் வெளியிலிருந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது என எனக்கு எதிராகக் கூச்சலிட்டனர். எனவே, கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு நான் வெளியே வந்து விட்டேன் எனத் தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து பாஜக (கல்ராஜ் மிஸ்ரா, யஷ்வந்த் சின்ஹா), அதிமுக (தம்பிதுரை, பாலகங்கா), சிவசேனை (ஆனத்ராவ் அட்சூல்), ஐக்கிய ஜனதா தளம் ( என்.கே.சிங்) உறுப்பினர்களும் அறையில் இருந்து வெளியே வந்தனர். கூட்டத்துக்குப் "புதிய தலைவர்': எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், காங்கிரஸ், திமுக, பகுஜன், சமாஜவாதி கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அங்கேயே இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சைபுதீன் சோûஸ இந்தக் கூட்டத்தை நடத்த "தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்'.அறிக்கை "நிராகரிப்பு': இதனைத் தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷியால் தயாரிக்கப் பட்ட வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற "தீர்மானத்தை' திருச்சி சிவா கொண்டு வந்தார். இதன் அடிப்படையில் "புதிய தலைவர்' சைபுதீன் சோஸ், வரைவு அறிக்கையை நிராகரிக்கும் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். அதன்பின்னர் வரைவு அறிக்கையை நிராகரிக்கும் "தீர்மானம்' வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளியேறிவிட்ட நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 11 எம்பிக்கள் பிஏசி வரைவு அறிக்கையை "நிராகரித்தனர்'.கூட்டத்துக்குப் பிறகு, புதிய "தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட' சைபுதீன் சோஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் மக்களவைத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன். அவர் அதன் மீது முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து முரளி மனோகர் ஜோஷியின் அறைக்கு சென்று மாலையில் தனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொண்ட முடிவுகளின் விவரங்கள் அடங்கிய "தீர்மான நகல்களை' அவரது அலுவலக உதவியாளரிடம் சோஸ் அளித்து சென்றார்.ஜோஷி எதிர்ப்பு: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷி, "கூட்டத்தை ஒத்திவைத்த பிறகுதான் வெளியேறினேன். கூட்டம் முடிந்த பிறகு வாக்கெடுப்பு நடத்த முடியாது. புதிதாகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் முடியாது. இப்போதிருக்கும் தலைவர் கூட்டத்துக்கு வர மறுப்புத் தெரிவித்தாலோ, கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தாலோதான் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்' என்றார்.
thanks
No comments:
Post a Comment